கால அட்டவணை

செவ்வாய், 3 நவம்பர், 2009

பாட்டி வைத்தியம்

அடை மழைக் காலம் ராத்திரி பிடித்த மழை இன்னும் விட்ட பாடில்லை, உரலில் வைத்து மையமாக இடித்த வெற்றிலையை மென்று கொண்டே முற்றத்தில் கால் நீட்டி அமர்ந்தபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி.“டி.வி.ல கனமழை பெய்யும்னு சொல்லவே இல்லையே... இப்படிப் பேய்மழை பெருமழையா புடிச்சு அடிக்குது...”தனக்குள் முனகிக்கொண்டே, முற்றத்தைச் சுற்றிலும், நீர் வேலியைப் போல் தாழ்வார விளிம்பில் இருந்து சீராகப் பொழியும் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள் பாட்டி.அப்போது ஈரம் சொட்டச் சொட்ட, பத்து வீடு தள்ளி இருக்கும் பத்மா தன் மகளோடு வந்து உள்ளே நுழைந்தாள்.“அடி, ஏண்டி இந்த மழையில நனைஞ்சபடி இந்த சின்னப் பொண்ணையும் கூட்டிக்கிட்டு... இந்தா... அந்த மூலைக் கொடியில துண்டு கிடக்கு... மொதல்ல ரெண்டு பேரும் தலையைத் துவட்டுங்க....” பாட்டி கண்டிப்போடும் கரிசனத்தோடும் சொன்னதைத் தட்ட முடியாமல் பத்மா சென்று அங்கு கொடியில் கிடந்த துண்டை எடுத்து, மகளுக்கும் துவட்டி விட்டு, தானும் தலையைத் துவட்டிக்கொண்டாள்.இல்லாவிட்டால், பாட்டி அதையே சொல்லிக் கொண்டு தான் செல்வதைக் கேட்க மாட்டாளே. “இப்ப சொல்லுங்கடி அம்மா... ஏன் இந்த விடாத பெருமழையில அடாது அடம்புடிச்சி வந்த காரணத்த...”பாட்டி கேட்டவுடன் தான் வந்ததற்கான காரணத்தை சொல்லத் தொடங்கினாள் பத்மா.“எல்லாம் ஓம் பேத்தி விவகாரம்தான் பாட்டி... இவ வயசுக்கு வந்து ஒரு வருஷமாச்சு. மாத விலக்கு சீரா ஆகமாட்டேங்குது. சமயத்துல 3 மாதம் வரைக்கும் ஆகாம இருந்துர்றா... அதுதான் பயமாக இருக்கு...”பத்மாவின் பதற்றத்திற்கான காரணத்தை புரிந்துகொண்ட பாட்டி, அடுத்த சுற்று மெல்லுவதற்கான வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசத் தொடங்கினாள். “அடியே பத்மா... பொண்ணுகளுக்கு எது வேனாலும் முன்பின்னா இருக்கலாம். ஆனால் மாதவிலக்கு மட்டும் சரியா இருக்கணும். மாதா மாதம் போறதுனால தான அத மாதவிலக்குனு சொல்லுறாங்க.. இல்லயின்னா அதுனால பல சங்கடங்கள் வரும். உதிரம் ஒழுங்காப் போனாத்தான் பொண்ணுங்க சரீரம் ஆரோக்கியமா இருக்கும். மொதல்ல நேரத்துக்கு சத்தான ஆகாரங்களைச் சாப்பிடணும். தேவையான அளவு தூங்கணும், பொண்ணுகளுக்கு மாத விலக்குங்குறது வெறும் உடம்பு சம்பந்தப்பட்டதும் மட்டுமில்ல மனசு சம்பந்தப்பட்டதும் கூட சஞ்சலத்துனால மனசு விவகாரம் அடையுறபோது எல்லா பாதிப்பும் வரும், அது வயசுக் கோளாறாவும் இருக்கலாம். இத கண்டுக்காம விட்டுட்டா பிற்காலத்துல குழந்தை பேறுல கூட பிரச்சனைய உண்டாக்கும். இதையெல்லாம் கடந்து தாண்டி அம்மா, பொம்புளப் புள்ளைகள காப்பாத்த வேண்டி இருக்கு. எதுக்கும் பயப்படாத. நான் சொல்ற மருந்த செஞ்சு சாப்பிடச் சொல்லு. எல்லாம் சரியாப் போகும்...”காயவச்சி பொடிச்ச கோவை இலை - 2 கிராம்மணத்தக்காளி இலை - 2 கிராம்செம்பருத்தி பூ - 2 கிராம்ரோஜா இதழ் - 2 கிராம்துளசி - 2 கிராம்சுக்கு - 2 கிராம்மிளகு - 2 கிராம்திப்பிலி - 2 கிராம்சித்தரத்தை - 2 கிராம்இவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் 2 வெற்றிலை சேர்த்து 200 மி.லி. தண்ணீரில் பாதியாக வற்றக் காய்ச்சி காலை, மாலை இருவேளை என மாதவிலக்கு வரும் நாளுக்கு மூணு நாளுக்கு முன்னாடி குடிக்கணும். சிலருக்கு மாதவிலக்கு வரும் நாள் தள்ளிப்போனால் மாதவிலக்கு வரும் நாளை கணக்கு வைத்து அருந்த வேண்டும். இப்படி மூணு மாதங்கள் மாதவிலக்கு காலத்துல குடிச்சிக்கிட்டு வர்றது நல்லது.பாட்டி சொன்ன மருந்தை மனதில் வாங்கிக் கொண்டு, பத்மா தன் மகளை அழைத்துக் கொண்டு பாட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். மழை சற்றே ஓய்ந்திருந்தது. செய்தி நக்கீரன்

கருத்துகள் இல்லை: