கால அட்டவணை

திங்கள், 31 ஜனவரி, 2011

வீழ்கிறது 30 ஆண்டு சர்வாதிகாரம்

பெயர் :ஹோஸ்னி முபாரக்


பிறந்த தேதி:4 மே 1928

ஊர் :மினுபியா

தொழில் :சர்வாதிகாரம்

இன்று உலகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களும் உற்று நோக்கி கொண்டுள்ளது. இந்த நாட்டின் தலைஎழுத்து எப்படி மாற போகின்றது என்று. மக்கள் புரட்சி நாளுக்கு நாள் வேகம் பிடித்த வண்ணம் உள்ளது. இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு உள்ளார் ஹோஸ்னி முபாரக்.

யார் இந்த ஹோஸ்னி முபாரக், இவரின் சுயருபம் என்ன?

இவருடைய நாட்டு மக்கள் இவரை நேசித்தார்களா?

இல்லையெனில் இவராவது நாட்டு மக்களை நேசித்தாரா?

முப்பது ஆண்டு கால ஆட்சியில் இவர் செய்தது என்ன?

இவரை யாரும் எதிர்க்க கூடாது, அவ்வாறு எதிர்ப்பவரை வளர விட கூடாது, என்பதில் தான் இவருடைய கவனமும் கவலையும் இருந்தது. நாட்டின் வளர்ச்சியை பற்றியோ, நாட்டு மக்களின் நலனை பற்றியோ இவர் எப்பொழுதுமே கவலை பட்டது கிடையாது. அமெரிக்காவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். வளைகுடா நாட்டில் நடந்த அனைத்து போர்களுக்கும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

வளைகுடா நாட்டில் அமெரிக்காவின் பெயரை சொல்லி, அவர்களை மிரட்டி சம்பாதித்தது.

நம்பிக்கை (துரோகி) என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்பவர் இவர். காட்டி கொடுப்பது என்பது இவருக்கு கை வந்த கலை. இன்று இவருடைய கொடுங்கோல் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க மக்கள் களம் இறங்கி உள்ளார்கள்.

அரசியல் கொலைகாரன் என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு. இவரை மக்கள் அடித்து விரட்டுவது முடிவாகிவிட்டது. இவருக்கு அடைக்கலம் கொடுக்க அரபு நாடுகள் மறுப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

சனி, 29 ஜனவரி, 2011

குறட்டையை தடுக்க வழிகள்


நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.


ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறை:


குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

http://www.maalaimalar.com/2011/01/26125828/medical-uses.html

நன்றி: மாலைமலர்  
செவ்வாய், 25 ஜனவரி, 2011

சுயநலம்

கலை என்ற பெயரில்

கலாச்சார அழிவு

விளம்பரம் என்ற பெயரில்
பெண்களை போதை பொருள் ஆக்கி
பெண்ணினத்தை அவமதித்தல்

போட்டி என்ற பெயரில்
மனிதனின் வாழ்க்கையோடு
விளையாடி பார்த்தல்

புகழுக்காக தன்
மானத்தையும் இழக்க
தயங்காத கூட்டம்

பணத்திற்காக பகல்
வேஷம் இடும்
பகல் கொள்ளையர்

உனக்கும் உண்டு
ஒரு நாள் இறப்பு
மறந்து விடாதே.....சனி, 22 ஜனவரி, 2011

நகரமா....................? நரகமா.............??


     என்ன தலைப்பை இப்படி போட்டு பயமுறுத்துகிறேன் என்று பார்க்க வேண்டாம். சென்னை போன்ற சிட்டியில் வாழும் நடுத்தர மக்களின் நிலையை தான் இங்கு விளக்குகிறேன்.


     எல்லாருக்கும் காலை பொழுது எத்தனை மணிக்கு தொடங்குமென்பது தெரியாது , ஆனால் சென்னைவாசிகளுக்கு 3 .00 மணிக்கு எல்லாம் தொடங்கி விடும். எழுந்ததில் இருந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு உணவு, வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவு என்று தன் காலை வேலையை தொடங்கி, பிள்ளைகளை சீருடை அணிவித்து அவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, பிறகு அலுவலகம் செல்லும் தன் கணவரை எழுப்பி அவருக்கு உரிய பணிகளை செய்து முடித்து, பிறகு பகல் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கி, அவை முடியும் நேரம் பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளைகளை உடைகளை மாற்றி, அவர்களை டியுசன் படிக்க தயார் செய்து, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து உறங்க வைக்கும் வரை பம்பரமாக சுற்றி தன் கடமையே கண்ணாக இயங்கும் குடும்ப தலைவியின் நிலை இது தான்.

     இது ஒரு புறம் இருக்க, ஊரில் இருந்து வரும் உறவினர்களிடம் சென்னையில் வசதியாக வசிப்பதாக காட்டிக்கொள்ள ,வருமானத்திற்கு மேல் (தவணைக்கு) வாங்கி போடும் டிவி, சோபா, ஃப்ரிட்ஜ் , ஏர் கண்டிஷன், பைக், கார் இப்படி வாங்கி போட்டு தன் தலையில் பாரத்தை ஏற்றி கொள்ளும் குடும்ப தலைவன்.

     ப்ரீகேஜி இந்த வகுப்பை கண்டு பிடித்தவன் யாருன்னு தெரியாது, தெரிந்தால் உங்களால் முடிந்தால் நாலு மொத்து மொத்துங்க. இதில் தன் பள்ளி வாழ்க்கையை தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும் வரை படிப்பு படிப்பு என்று, மூளையை சலவை செய்து, விளையாட கூட முடியாமல் ,எதிலும் ஓர் ஆர்வம் இல்லாமல் உறங்கி காணப்படும் பிள்ளைகள்.

சரி இப்படியெல்லாம் இயங்கி இவர்கள் என்னத்தை சாதித்தார்கள்?


இதோ பட்டியல்:1.நரம்பு தளர்ச்சி நோய்

2.கேன்சர்

3.சத்தான உணவு உண்ணாமல், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழத்தல்.

4.சரியான நேரத்தில் உணவு அருந்தாமல், வாய்வு போன்ற தொல்லைகள் ஏற்படுதல்.

5.அதிகமாக நீர் அருந்தாமல் கல் (stone) ஏற்படுதல்.

வேலை பளு காரணமாக, ரத்த கொதிப்பு மற்றும் இனிப்பு நீர் போன்ற நோய்கள் ஏற்படுதல்.

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி அதிகமான இறப்பு இளைய சமுதாயமாக உள்ளது.


புதன், 19 ஜனவரி, 2011

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வுமோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.


இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.

அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி

5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.

அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி

2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.

அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி

2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011

வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.

ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.

இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான் ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.

இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.

பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.

மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்
போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.

விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.

இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.

மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.

மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.

பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!

அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்

20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.

சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!

இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..

அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.

எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.

எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.

Tntj.net இணையதள நேயர்களுக்காக..

பெட்ரோல் விலை பற்றிய சிறப்பு ஆய்வு

அபு நபீலா

(விலை உயர்வால் பாதிக்கப்பட்டவன்)

புள்ளி விபரத்தில் சற்று கூடுதல் குறைவு இருப்பதாக யாருக்கும் தெரியவந்தால் தெரியப்படுத்தவும்.

Ref: MoneyControl , Indian gov Tax website, Press News, indian budget
 
நன்றி: TNTJ  


சனி, 15 ஜனவரி, 2011

மன உறுதி


கண்டேன் அவனை

சோகம் படிந்த முகம்

'விரக்தியான கண்கள்;

தளர்ந்த நடை;

ஒழுங்கில்லாத உடை;

வருந்துகின்ற தோற்றம்;

எதிலுமில்லை நாட்டம்;

கேட்டேன் அவனை

நோய் என்றான்

அவன் உடலிலா

இல்லை மனதிலா?

ஓ உடலை பாதித்தால்

அது மனதை பாதிக்குமோ

அதற்கு தான் மனதில்

உறுதி வேண்டும் என்றார்களோ.....
திங்கள், 10 ஜனவரி, 2011

அச்சம்............இல்லை .........

ஓ மனிதா....

உன் மனதில் சுத்தமில்லை

உன் செயலிலில் சுத்தமில்லை

உன் வார்த்தையில் சுத்தமில்லை

புகழ் மட்டும் வாழ்க்கையில்லை

புரிபவருக்கு அதில் இடமில்லை

ஆசைக்கு எல்லையில்லை

அதற்கு ஒரு விலையில்லை

சிந்தனைக்கு இடமில்லை

பிறர் மனதில் இடமில்லை

மனிதா இந்த நிலையற்ற உலகில்

உன் ஆணவத்திற்கு எல்லையில்லை

இன்னுமா நீ மாறவில்லை? -எனில்

உனக்கு மன(தில்) நிம்மதியில்லை!

உனக்கு மனதில் அமைதியில்லை!வியாழன், 6 ஜனவரி, 2011

பழமையா..............புதுமையா................?

     இன்றைய சமுதாயம் அன்றாடம் பல்வேறு புதிய புதிய நோய்களை எதிர் நோக்கி கொண்டு உள்ளது.


     ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் பேச்சு கொடுத்தால், ஓவ்வொருவரும் ஏதாவது ஒரு நோயை சுமந்த வண்ணமாக உள்ளார்கள். பிறக்கும் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயின்றி வாழ்க்கை இல்லை என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சத்திற்கு மனிதர்களின் நிலை போய் கொண்டு உள்ளது.

இதற்கு யார் காரணம்?

நமக்கு நாமே வினை விதைக்கிறோமா?

இப்படி பல கேள்விகள்.

நம்மை நாமே ஏன் சற்று பின்னோக்கி பார்க்க கூடாது?

இதோ.........

மண் பாண்டகளில் உணவு சமைத்து சாப்பிட்டு வந்த நாம், அலுமினிய பாத்திரத்தையும், சில்வர் பாத்திரத்தையும் நாடியது மிக பெரிய தவறு.

பழைய உணவுகளை அடுப்பில் மட்டும் சூடு படுத்தி சாப்பிட்ட நாம், இன்று ஓவனின் உதவியை நாடுவது.

உணவுகளை குளிர் சாதனா பெட்டியில் வைத்து நீண்ட நாட்களுக்கு உண்பது.

வீட்டில் உணவு தயாரிக்க அலுப்பு பட்டு ,பாஸ்ட் புட் வாங்கி சாப்பிடுவது.

வீட்டின் அருகிலேயே சுத்தமான கறி வகைகள் கிடைக்கும் பொழுது, அதை வாங்கி உபயோகிக்காமல் பதப்படுத்தப்பட்ட கறி வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அலுப்பு பட்டு, பிள்ளைகளை காண்வென்டில் சேர்ப்பது, அதை மற்றவர்களிடம் தன் பிள்ளை காண்வென்டில் படிப்பதாக பெருமைப்பட்டு கொள்வது.

நமது விளை நிலங்களுக்கு , அந்நிய நாட்டு உரங்களை பயன்படுத்தியது.

சிறிய நோய்களுக்கும், நாட்டு மருந்துகளை நாடாமல், முழுக்க முழுக்க ஆங்கில மருந்துகளை நாடியது.

சிறிய தலைவலிக்கு கூட மருந்தை உபயோகிப்பது .

சிறிய சிறிய வேலைகளை கூட செய்யாமல், அதற்கு வேலை ஆட்களை நியமிப்பது.

வெளியில் செல்லும் பொழுது, அருகில் உள்ள இடத்திற்கு கூட நடக்க அலுப்பு பட்டு, வாகனத்தின் உதவியை நாடுவது.

கீழ் வீட்டில் இருந்து கொண்டு , மேல் வீட்டில் உள்ளவர்களை அழைக்க கைபேசியை பயன்படுத்துவது. கைபேசியில் அதிக நேரம் பேசுவதை பெருமையாக நினைப்பது.

நம்முடைய அதிக நேரத்தை தொலைகாட்சியிலும் , கணினியிலும் பயன்படுத்துவது.

கர்ப்பம் தரித்தவுடன் சிறிய வேலைகள் கூட செய்யாமல், நடையை குறைத்து கொள்ளுதல். (இது பெண்களுக்கு சுக பிரசவம் ஏற்படாமல் தடுக்கின்றது. )

பிறந்தவுடன் தாய் பால் குடித்து வளர்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு புட்டி பாலை கொடுத்து வளர்க்க ஆரம்பித்து விட்டோம். இது நம் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு.

நம்மில் சிலர் ,எந்த நேரமும் வேலை வேலை என்று வீடுகளில் பெண்களும், அலுவலகத்தில் ஆண்களும் தன் எனர்ஜி தன்னை விட்டு செல்லும் வண்ணம் தன்னை தானே மறந்து உழைப்பது .

கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சம்மந்தமான பிரச்சினைகளை, அன்றாடம் அதற்கான நேரம் ஒதுக்கி அமர்ந்து பேசி தீர்க்க முயலாமல் இருப்பது.

நம்முடைய மன கஷ்டத்தை தனக்கு தானே, மனதில் வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் இருப்பது.

பருவம் அடைந்த பிள்ளைகளின் மீது, தனி கவனம் செலுத்தாமல் இருப்பது.

பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்ப்பது.

இப்படியாக சொல்லி கொண்டே போகலாம்.

நோய் அற்ற வாழ்க்கை நம் அனைவருக்கும் வேண்டும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

நம்மால் பழைய நிலைக்கு ஏன் திரும்ப முடியாது.

முடியாது என்பது, நமக்கு நாமே சொல்லி கொள்வது.
முடியும் என்பது, நமக்கு நாமே வகுத்து கொள்வது.

வெற்றி என்பது பெற்று கொள்வது
தோல்வி என்பது கற்று கொள்வது.

திங்கள், 3 ஜனவரி, 2011

தென்றல்

என் சுவாச காற்றில்

இனம் புரியா ஓர் உணர்வு

ஆம் அந்நிய மண்ணை

என் பாதம் தொட்டு விட்டது

தாயகத்தின் தென்றலை

பாலைவனத்தில் காண்பது என்பது

கானல் நீர் தானே.


விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் மனத்தில் தோன்றியதை இங்கு உங்கள் முன் வைத்துள்ளேன்.

அவார்ட்

இந்த அவார்டை கொடுத்து ஊக்குவித்த சகோதரி ஜலீலா கமால் அவர்களுக்கு மிக்க நன்றி.