கால அட்டவணை

வியாழன், 29 ஜூலை, 2010

துறைமுகம்

  ஆம் ஒரு நாட்டின் தொழில் துறையில் முக்கிய
 பங்கு வகிக்கும் தளம்.

     இந்த துறைமுகத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகின்றேன்.

எங்கள் ஊர் கடற்கரையில் நின்று கொன்று, நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வெளியில் நடுகடலில் நிற்கும் கப்பல்களை மட்டுமே பார்த்து ரசித்த எனக்கு, ஜித்தா துறைமுகத்தில்
வேலை கிடைத்த பொழுது, துறைமுக வேலை புதியதாகவும்
ஆர்வமாகவும் இருந்தது.

ஜித்தா துறைமுகத்தை,சிறிது உங்களுக்கு ஓர் அறிமுகம் செய்கின்றேன்.

இதன் முழு பெயர் ஜித்தா இஸ்லாமிக் போர்ட், இங்கு ஒரே நேரத்தில் 58 கப்பல்களை நிறுத்தும் வசதி உள்ளது.

சாதாரண கிளார்க் ஆக என் பணியை தொடங்கி,சீனியர் சூப்பர்வைசர் ஆக என் பணியை நிறைவு செய்தேன்.

பல அனுபவங்கள் ஒவ்வொன்றும் என் வளர்ச்சிக்கு
துணையாக இருந்தது.

ஒரு கப்பல் ஒரு நாட்டின் கடல் எல்லையை தொட்டவுடன், அதன் கேப்டன் அவர் செல்ல இருக்கும் துறைமுகத்தின் கண்ட்ரோல் அதிகாரியை தொடர்பு கொள்வார். அந்த நிமிடத்திலேயே அந்த கப்பல் எங்கிருந்து வருகிறது.அவை ஏற்றி வரும் பொருட்கள் என்ன என்பது போன்ற விவரங்கள் அனைத்து பெற்று விடுவார்கள்.
துறைமுகத்துக்கு 4 கிலோ மீட்டர் முன்பாக வந்தவுடன் அங்கு நிறுத்தப்பட்டு, துறைமுகத்தில் இருந்து டெக்போட் என்று அழைக்கப்படும் சிறிய படகுகள், அதி நவீன மோட்டார்களை கொண்டது,அவை சென்று அந்த கப்பலை அழைத்து வரும்,அதனுடன் துறைமுகத்தை சேர்ந்த பைலட்டும் இருப்பார். அதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அந்த கப்பல் கொண்டு வந்து கட்டப்படும்.

ஆனால் அதற்கு முன்பாகவே அந்த கப்பலுக்கு உரிய ஏஜென்ட் அந்த கப்பலில் வரும் பொருள்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை
கப்பல் வருவதற்கு சில தினத்திற்கு முன்பாகவே சமர்பித்து விடுவார்கள்.

அந்த பட்டியலில் குறிப்பிடபட்டுள்ள பொருள்களை மட்டுமே அந்த துறைமுகத்தில் இறக்க அனுமதிக்கப்படும்.

இந்த விசயத்தில் UAE மற்றும் சவுதி போன்ற நாடுகளிடம் பல நவீன கருவிகள் நிறைய உள்ளது.

இவர்களால் குறிப்பிட்ட மணிகணக்கிலேயே பொருள்களை இறக்கவும் ஏற்றவும் இவர்களால் முடிகின்றது.

அதிகமான கார்களை இறக்குமதி செய்யும் நாட்டில் முன்னிலை வகிப்பது சவுதி அரேபியா மட்டுமே. ஜப்பான் கொரியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்யும் கார்கள். வளைகுடாவை
நம்பியே இருக்கின்றன.

தான் வந்த வேலை முடிந்தவுடன் அந்த துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற அனுமதி பெறவேண்டும்.

நம் பார்வைக்கு ஒரு கப்பல் இன்னொரு நாட்டின் உள்ளே வந்து செல்வது இலகுவாக தெரியும் , அவற்றில் எராளமான விஷயங்கள் இருக்கிறது.

என்னோடு பணியாற்றிய சகோதரர்களையும் கூற ஆசைபடுகின்றேன்.Mr. மணிகண்டன் நான் ஏற்றுமதி துறையில் கிளார்க் ஆக பணியாற்றும்
பொழுது என்னுடைய சூப்பர்வைசர் ஆக இருந்தவர் . வேலைகளை சொல்லி கொடுப்பதில் அருமையான குணம்.

சேப்டி அதிகாரி Mr.கவுஸ் மரைக்கார் நல்ல மனிதர் எந்தவித நெருக்கடிகளையும் சிரித்தே சமாளித்துவிடுவார்.

ஆப்ரேசன் செக்சன் இதனுடைய கண்ட்ரோலர் Mr.ஹமீது அன்வர் நல்ல மனிதர், வேளையில் தவறு செய்தால் அதை அவரிடம் மறைக்காமல் கூறவேண்டும் ,மறைத்தால் அவருக்கு
பிடிக்காது. அவரின் கீழ் பணி யாற்றியவர்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு, அவரின் வழிகாட்டியே காரணம்.

எனக்கு பல்வேறு வகையிலும் என் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர் இந்த ஹமீது அன்வர் அவர்கள் தான். பணியில் நேர்மையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதில்

கவனம் செலுத்துவதில் இவரை மிஞ்ச முடியாது.

இன்னும் சில நண்பர்கள் Mr.ஹபீப் ரஹ்மான் மற்றும் Mr.ரவி இவர்களும் என்னோடு பணியாற்றிய நண்பர்கள் பலர்.

இன்றோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைகளில் இருகின்றோம்

இந்த துறைமுகத்தில் நான்ஆற்றிய பணி எனக்கு பல்வேறு சந்தர்பங்களிலும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது.

திங்கள், 26 ஜூலை, 2010

ரமலான்

வருக... வருக...


ரமலானே.....



உன் வருகைக்காக

என் விழி முதல்

செவி வரை

காத்திருக்கின்றது



என் மனதை சுத்தம் செய்ய

என் நாவை கட்டுப்படுத்த

உன்னை விட்டால் வேறு

யாரும் கிடையாது எனக்கு



வருடம் ஒரு முறை

உன் வருகை

ஒட்டுமொத்த உள்ளத்தையும்

ஒளிரச் செய்கின்றாய்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

மாணவருக்கு ரொக்க பரிசு


     மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று கூறியவர் யாரோ?
 அது நமக்கு தேவையில்லை.

மனம் இருந்தால் மற்றவர்களுக்கு நாம் நிச்சயம்,பொருளாலும் மனதாலும் உதவ முடியும். அவை மற்றவர்கள் மனத்திற்கு பல
 ஊக்கத்தை கொடுக்கின்றது.

அந்த உதவி சிறியதோ பெரியதோ.

     இங்கு எனக்கு கிடைத்த ஒரு நல்ல நண்பரை பற்றி சிறிது கூற விருப்புகின்றேன்.

     இன்று புகழ் பெற்று விளங்கும் ஒரு நிறுவனம் ST கார்கோ, ST கூரியர் இதன் நிறுவனரும் இயக்குனரும் ஆகிய, மதிப்பிற்குரிய நண்பர் அன்சாரி அவர்கள்.

மனிதர்களில் பலவிதம் உண்டு, அதில் இவர் ஒரு தனி ரகம்.
உதவி செய்வதில் ஒரு தனி விதம்.

தமிழகத்தில் எத்தனையோ பெரிய நிறுவனக்கள் இருந்தாலும். அவர்கள் எல்லாம் நினைக்காத ஒன்றை,

இந்த நிறுவனம் செய்து காட்டி உள்ளது.

ஆம் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பரிசு தொகை.

நல்ல எண்ணம் கொண்ட சகோதரர் மதிப்பிற்குரிய அன்சாரி அவர்களுக்கும், மற்றும் நிருவாகத்தினருக்கும்  உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும்
 நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.





வெள்ளி, 23 ஜூலை, 2010

நினைவுகள்



     நாகப்பட்டினத்தில் உள்ள C S I மேல் நிலை பள்ளியில் +2 படித்து கொண்டிருந்த சமயம்,
N S S (நாட்டு நல பனி திட்டம்) பத்து நாள் கேம்ப் போயிருந்த பொழுது, எங்கள் பள்ளி


“குறிச்சி” என்ற கிராமத்தை தத்து எடுத்து, அங்கு உள்ள தெருக்களில் கன்றுகள் நடுவது, குளம் கோயில் பள்ளிகூடம்

போன்றவற்றை சுத்தம் செய்வதாக திட்டம்.

மாலை நேரங்களில் வீடு வீடாக சென்று, போஸ்ட் ஆபீசில்

சேவிங் கணக்கு எவ்வாறு தொடங்குவது என்பதை
விளக்கி அவர்களுக்கு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அவர்களை உற்சாகப் படுத்தினோம்.

அந்த மக்களோடு கலந்து பழகிய போது தான், அவர்களில் படிக்காத மேதைகள் பலரை கண்டேன்.



நான் படித்தவன் நான் நகர வாசிஎன்ற "மேதை" கள் மத்தியில் இவர்கள் படிக்காத மேதைகளாகவே

தெரிந்தார்கள்.

ஒரு நாள் அங்கு உள்ள குளத்தில் நான் குளிக்கும் போது, என் காலில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டு ரொம்ப கஷ்டமாகி விட்டது.

அந்த கிராமத்தில் டாக்டர்கள் யாரும் கிடையாது.

ஒரு பெரியவர் என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்று, காய்ந்த முந்திரிகொட்டையை இரண்டாக உடைத்து ,அதில் ஒரு பாதியை கிளிப்பால் பிடித்து விளக்கில் காட்டி சூடு படுத்தி,

அந்த பாதி மூடியில் திரண்டு வந்த திரவத்தை என் காலில் உள்ள வெட்டு காயத்தில் ஊற்றினார். சில நிமிடங்கள் வலித்தது.

காலையில் எழுந்து என் கால்களை நோக்கினேன். வலி எல்லாம் பறந்து
போய் விட்டது. மனதில் மிக்க சந்தோசம்.

மீண்டும் அந்த பெரியவரை தேடி சென்று என் நன்றியை கூறி விட்டு வந்தேன்.

வெள்ளை மனம் படைத்த அது போன்ற மனிதர்கள் ஏராளம்.

அவர்கள் மத்தியில் நாம் எங்கே? அவற்றைப் பற்றி நாம் இங்கே சிறிது சிந்திக்க கடமை பட்டு உள்ளோம்.

வெள்ளி, 16 ஜூலை, 2010

விடியலை நோக்கி

     நீண்ட நேரமாகியும் சமீம் உறங்கவில்லை. அவன் பலமுறை உறங்க முயன்று தோல்வியே கண்டான், காரணம் நாளை அவன் செல்ல இருக்கும் 20 தாவது நேர்முக தேர்வு.
    
     அவனுக்கு


கிடைக்குமா என்ற கவலை. MBA முடித்து ஒரு வருடமாகின்றது சரியான வேலை கிடைக்கவில்லை.

     வாப்பா உடன் சேர்ந்து விவசாயம் செய்யலாம் என்றால். வாப்பா அது என்னோடு போகட்டுமே நீ படித்த படிப்புக்கு உரிய வேலையில் சேர முயற்சி செய் என்கிறார். எப்படியும் ஒரு நல்ல வேளையில் சேர்ந்து வாப்பாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்கின்ற முயற்சி தள்ளி போய் கொண்டே இருக்கின்றது.

     மறுபுறம் திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை.

வாப்பாவின் வருமானமோ குடும்ப செலவிற்கே சரியாக உள்ளது.










     அதிகாலை தொழுகைக்கு பின், சூரியன் உதயத்திற்கு முன் செல்வார்கள். மாலை சூரியன் மறைவிற்கு பின் வீடு திரும்புவார்கள்.


     ஒரு முறை வாப்பாவின் காலில் ஏற்பட்ட காயம், ஒரு மாதம் வயல் பக்கமே செல்ல முடியவில்லை.

     பல முறை அறுவடை நேரங்களில் ,பெய்த கன மழையால் பயிர்கள் முற்றும் அழிந்து போய் விடும்.

நாங்கள் விவசாயியாக பிறந்தது குற்றமா?. இதற்கு விடிவு காலம் தான் எப்பொழுது?


சில நேரங்களில் எங்களையும் அறியாமல்,கண்களில் நீர் வடிவதை தடுக்க முடியாது.

அவர்கள் என் படிப்பிற்காக பட்ட கஷ்டங்கள்,என் கண்களை பல முறை குளமாக்கி உள்ளது. தொழுகையின் அழைப்பு சத்தம், பொழுது விடிந்து விட்டதை உணர்த்தியது.

முழு நம்பிக்கையுடன் புறபட்டான்.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

புலம்பல்

     எங்கள் வங்கியில் பணம் அனுப்ப வரிசையில் நின்ற
 ஒரு வாடிக்கையாளரின் புலம்பல், என் செவிகளுக்கு
எட்டியதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.


வெளிநாடு செல்ல

ஏஜென்ட் இடம்

நின்றேன் வரிசையில்



மருத்துவ பரிசோதனைக்கு

மருத்துவ மனையில்

நின்றேன் வரிசையில்



விமானத்தில் பயணிக்க

சக பயணிகளோடு

நின்றேன் வரிசையில்



காலையில் வேலைக்கு செல்ல

நிறுவன வாகனத்திற்காக

நின்றேன் வரிசையில்



மாதம் முடிந்தது

ஊதியத்தை பெற

நின்றேன் வரிசையில்



குடும்பத்தை நினைத்தேன்

இப்பொழுது வங்கியில்

நிற்கின்றேன் வரிசையில்......

திங்கள், 5 ஜூலை, 2010

ரயில் நிலையம்

        ரயில் நிலையம் என்றவுடன் எல்லாருக்கும் ரயில் பயணம் பற்றி தான் நினைவுக்கு வரும்.  
எனது பள்ளி விடுமுறை நாட்களில்,காலை ஒரு 7 மணிக்கு ரயில் நிலையத்திற்கு புத்தகத்தோடு செல்வேன். ரயில் நிலையத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் பழக்கமான ஆட்களாக இருப்பதால், அங்கு அமர்ந்து படிக்க எந்த தொந்தரவும் இருக்காது.





இப்படி அடிகடி ரயில் நிலையம் செல்லும் பழக்கம் அதிகமானது.


அங்கு பல நண்பர்கள்களின் பழக்கமும் கிடைத்தது. என் ஊர் சுற்றுலா தளமாக இருந்ததால், இங்கு கேரளா ஆந்திரா கர்நாடக போன்ற மாநில மக்கள் நிறைய பேர் வருவார்கள்.





     நாகூரில் இருந்து சென்னை பெங்களூர் கொல்லம் போன்ற ஊர்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து உண்டு. ரயில் நிலைய கட்டிடங்கள் பழமையானதாகவே இருந்தது.


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரயில்வே மந்திரியாக ஜாபர் ஷரிப் பதவி ஏற்றார்.

ரயில் நிலையத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது. அழகிய கட்டிட கலையுடன் கூடிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.


அது என் பள்ளி பருவம்

பல்வேறு மொழி பல கலாச்சாரம் இப்படி பல மக்கள் வந்து போகிறார்கள். சிலர் முகத்தை பார்க்கும் பொழுது கவலை தெரியும் ,சிலர் நடையிலேயே அவர் மனதில் உள்ள பாரம் தெரியும்.

     அந்த நேரத்திலேயே மனதில் தோன்றும் எழுத வேண்டும். வெளிவுலகிற்கு தெரிய வேண்டும். சுயநலமே வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர்களுக்கு, மத்தியில் எவ்வளவு மனிதர்கள் பிரச்சினையோடு வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அப்படி நினைத்து எழுதி எழுதி கிழித்த என் பள்ளி நோட்டுகள் ஏராளம்.
அங்கு அமர்ந்து இருக்கும் பொழுது மனத்திரையில் எத்தனையோ
கதை கவிதைகள் திரையிடும். அவற்றை எழுத்தால்
வடிக்க நினைத்து தோல்வி கண்டு உள்ளேன்.

     என் பள்ளி நாளில் அது எனக்கு ஒரு அமைதி
பூங்காவாக காட்சி அளித்தது.விடுமுறையில் தாயகத்திற்கு என் குடும்பத்துடன் சென்று இருந்தேன்.
அப்படியெல்லாம் அனுபவித்த அந்த ரயில் நிலையத்திற்கு,

     என் பிள்ளைகளோடு சென்று வந்தேன். என் கண்களால் நம்ப முடியவில்லை பாழடைந்த கட்டிடமாக காட்சி அளித்தது. பிராட்கேஜ் போடும் வேலை நடப்பதாகவும் ஆதலால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். கனத்த மனத்துடன் வெளியில் வந்தேன்.