கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.
சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!
அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!
எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!
பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக