எனது பள்ளி விடுமுறை நாட்களில்,காலை ஒரு 7 மணிக்கு ரயில் நிலையத்திற்கு புத்தகத்தோடு செல்வேன். ரயில் நிலையத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் பழக்கமான ஆட்களாக இருப்பதால், அங்கு அமர்ந்து படிக்க எந்த தொந்தரவும் இருக்காது.இப்படி அடிகடி ரயில் நிலையம் செல்லும் பழக்கம் அதிகமானது.
அங்கு பல நண்பர்கள்களின் பழக்கமும் கிடைத்தது. என் ஊர் சுற்றுலா தளமாக இருந்ததால், இங்கு கேரளா ஆந்திரா கர்நாடக போன்ற மாநில மக்கள் நிறைய பேர் வருவார்கள்.
நாகூரில் இருந்து சென்னை பெங்களூர் கொல்லம் போன்ற ஊர்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து உண்டு. ரயில் நிலைய கட்டிடங்கள் பழமையானதாகவே இருந்தது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரயில்வே மந்திரியாக ஜாபர் ஷரிப் பதவி ஏற்றார்.
ரயில் நிலையத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது. அழகிய கட்டிட கலையுடன் கூடிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
அது என் பள்ளி பருவம்
பல்வேறு மொழி பல கலாச்சாரம் இப்படி பல மக்கள் வந்து போகிறார்கள். சிலர் முகத்தை பார்க்கும் பொழுது கவலை தெரியும் ,சிலர் நடையிலேயே அவர் மனதில் உள்ள பாரம் தெரியும்.
அந்த நேரத்திலேயே மனதில் தோன்றும் எழுத வேண்டும். வெளிவுலகிற்கு தெரிய வேண்டும். சுயநலமே வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர்களுக்கு, மத்தியில் எவ்வளவு மனிதர்கள் பிரச்சினையோடு வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.
அப்படி நினைத்து எழுதி எழுதி கிழித்த என் பள்ளி நோட்டுகள் ஏராளம்.
அங்கு அமர்ந்து இருக்கும் பொழுது மனத்திரையில் எத்தனையோ
கதை கவிதைகள் திரையிடும். அவற்றை எழுத்தால்
வடிக்க நினைத்து தோல்வி கண்டு உள்ளேன்.
என் பள்ளி நாளில் அது எனக்கு ஒரு அமைதி
பூங்காவாக காட்சி அளித்தது.விடுமுறையில் தாயகத்திற்கு என் குடும்பத்துடன் சென்று இருந்தேன்.
அப்படியெல்லாம் அனுபவித்த அந்த ரயில் நிலையத்திற்கு,
என் பிள்ளைகளோடு சென்று வந்தேன். என் கண்களால் நம்ப முடியவில்லை பாழடைந்த கட்டிடமாக காட்சி அளித்தது. பிராட்கேஜ் போடும் வேலை நடப்பதாகவும் ஆதலால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். கனத்த மனத்துடன் வெளியில் வந்தேன்.



